புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாகக் கருதப்பட்ட மரபணு (டி.என்.ஏ) பரிசோதனை அறிக்கை, குற்றப்புலனாய்வு பொலிஸாரினால், ஊர்க்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (18) சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு தொடர்பான ஏனைய விடயங்கள் குறித்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு உத்தரவிட்ட ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியால், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில், பத்து பேரது வழக்கு தனியாகவும், ஏனைய இருவரதும் வழக்கு தனியாகவுமே இதுவரை காலமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது.
எனினும், இன்று புதன்கிழமையன்று, இவ்விரு வழக்குகளும் ஒன்றாக்கப்பட்டு, ஒரு வழக்காகவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மிக நீண்டகாலமாக மன்றில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, அப்பரிசோதனைகளை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனத்தினால், குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட நிலையில், அவ்வறிக்கை, நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.
(நன்றி – எம்.றொசாந்த்)