பாதித்த மக்களுக்கு வழங்க அரசிடம் நிதிபோதாது – விமல்

பாதித்த மக்களுக்கு வழங்க அரசிடம் நிதிபோதாது – விமல்

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சபாநாயகருடன் இணைந்து நாமும் அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்’ என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம். பியுமான விமல் வீரவன்ச, அனர்த்தங்களுக்கு பின்னரான நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது என்று சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, சபாநாயகர் விடுத்த அறிவிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு 150 மில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பிரதமருக்கு கார் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் நான்கில் ஒரு பங்காகும் என்பதுடன் மொத்த சனத்தொகையில் 2 சதவீதமான மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

இதனிடையே எழுந்த சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க, கடுவலையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை, நான் சென்று பார்த்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கினோம்;

ஆனால், உறவினர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு 20 மில்லியன் ரூபாயை ஒதுக்கவில்லை’ என்றார்.

இதனால் சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. எனினும், குறுக்கிட்ட ஆளும்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, ‘இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு தேவையான அளவு நிதியை ஒதுக்குவதற்கு, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது’ என்றார். இதனையடுத்தே அந்த சலசலப்பு தணிந்தது.

 

(நன்றி – அழகன் கனகராஜ்)