2வது டெஸ்டில் ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம்

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பங்குபற்றுவது, சந்தேகத்துக்குரியதொன்றாக மாறியுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளன்று, அவரது முழங்காலில் ஏற்பட்ட உபாதைக்காக சிகிச்சை பெற்ற அவர், பின்னர் மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

பின்னர், மூன்றாவது நாளிலும் சில ஓவர்கள் மட்டுமே களத்தடுப்பில்  ஈடுபட்டு விட்டு மைதானத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், முதலாவது போட்டியில் பெறப்பட்ட வெற்றியின் பின்னர் கருத்துத் தெரிவித்த அலஸ்டெயர் குக், டேர்ஹாமில் இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புகள், ஸ்டோக்ஸூக்குக் குறைவாகவே காணப்படுவதை ஏற்றுக் கொண்டார்.

அவருக்கான ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர், அதன் பின்னர் இரண்டாவது போட்டிக்கான குழாமில் சேர்க்கப்பட்டாலும், இன்னுமொரு வீரர் மேலதிகமாகச் சேர்க்கப்படுவார் எனத் தெரிவித்தார்.