கொடுத்த லஞ்சம் உண்மையெனில் உலகக் கோப்பை தொடரை ரஷியா, கத்தார் நடத்த முடியாது

2018, 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடர்களை நடத்துவதற்காக ரஷியாவும், கத்தாரும் லஞ்சம் கொடுக்க முனைந்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், அந்நாடுகள் உலகக் கோப்பையை நடத்தும் உரிமையை இழந்து விடும் என்று, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபாஃ) தெரிவித்துள்ளது.

2010 உலகக் கோப்பைத் தொடரை நடத்துவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக, ரூ. 63 கோடி வரை ஃபிஃபா உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, கடந்த வாரம் செய்தி வெளியாகின.

இதை முதலில் தென் ஆப்பிரிக்கா மறுத்தாலும், லஞ்சம் அல்லாமல் வளர்ச்சித் திட்டத்துக்கு நிதி அளித்ததாக பின்னர் மழுப்பியது.

இதற்கிடையே, ஃபிஃபாவில் நடைபெற்ற லஞ்சம், ஊழல் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஃபிஃபா அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஃபிஃபா தணிக்கைக் குழு மற்றும் புகார்கள் கமிட்டியின் தலைவர் டொனிகோ ஸ்கலா கூறுகையில் “உலகக் கோப்பைத் தொடரை நடத்துவதற்கான உரிமம் பெறுவதற்காக ரஷியாவும், கட்டாரும் லஞ்சம் கொடுத்தது உண்மை என நிரூபிக்கப்பட்டால், அந்த உரிமம் ரத்து செய்யப்படும்.

அவர்கள் போட்டியை நடத்தும் தகுதியை இழந்து விடுவர். ஆனால், இந்த குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை’ என்றார்.