புதிய மருத்துவர்களுக்கான நியமனத்தின் போது மருத்துவர் சங்கத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய தாம் ஒருபோதும் தயாரில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய மருத்துவர்களை நியமிக்கும் போது தமது பட்டியலின் பிரகாரம் அவர்களுக்கான மருத்துவமனைகள் குறிப்பிடப்பட்டு நியமனம் வழங்கப்பட வேண்டும்.
கொழும்பு உள்ளிட்ட சில மருத்துவமனைகளுக்கு மேலதிக மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட சில அநீதியான கோரிக்கைகளை மருத்துவர் சங்கம் முன்வைத்துள்ளது.
அத்துடன் தமது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாகவும் மருத்துவர் சங்கம் எச்சரித்துள்ளது.
எனினும் மருத்துவர் சங்கத்தின் எச்சரிக்கையை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன புறக்கணித்துள்ளார்.
மருத்துவர் சங்கத்தின் கட்டளைக்கு இணங்க தாம் செயற்பட தயாராக இல்லை என்று அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
புதிய மருத்துவர்களுக்கான நியமனம் நேர்மையான முறையிலும், மருத்துவர் பற்றாக்குறை உள்ள பிரதேசங்கள் மற்றும் வெளி மாவட்ட மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் மட்டுமே நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சங்க அதிகாரிகள் இந்த விடயத்தில் அமைச்சின் செயல்பாடுகளுக்கு உதவ முடியுமே தவிர, நிபந்தனைகள் விதிக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளதை போன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக இருந்தால் அதனை மேற்கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.