வார்னரின் அதிரடியில் இறுதிச்சுற்றுக்கு தேரிவானது ஐதராபாத் அணி

IPL  இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

9வது IPL கிரிக்கெட் தொடரின், 2வது தகுதி சுற்றில் குஜராத் லயன்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற வார்னர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரிவித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் கணிசமான ஓட்டங்களை சேர்த்தபடியும் இருந்தது.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை குஜராத் லயன்ஸ் அணி சேர்த்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக பிஞ்ச் 50 ஓட்டங்களை சேர்த்தார்.

இதையடுத்து 163 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. ஐதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷிகர் தவான் கணக்கை துவங்கும் முன்பே ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அதனை தொடர்ந்து ஹென்ரிஹூயிஸ்(11), யுவராஜ் சிங்(8), ஹூடா(4), கட்டிங்(8), ஓஜா(10) என முன்னிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

விக்கெட்டுக்கள் ஒருபுறம் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் அணித்தலைவர் வார்னர் மட்டும் தனி ஒரு ஆளாக நிலைத்து நின்று ஓட்டங்கள் சேர்த்து வந்தார்.

35 பந்துகளில் அவர் அரைசதம் கடந்தார். வார்னருக்கு துணையாக பிபுல் சர்மா ஆடினார். கடைசி நான்கு ஓவர்களில் 45 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

17வது ஓவரில் 11 ஓட்டங்களும், 18வது ஓவரில் 10 ஓட்டங்களும் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி 2 ஓவர்களில் 24 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது.

ஆனால் பிராவோ வீசிய 19வது ஓவரில் 19 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. இதனால் ஐதராபாத் அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

வார்னர் பவுண்டரி அடித்து வெற்றியை எட்டினார். 19.2 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

58 பந்துகளில் 93 ஓட்டங்கள் குவித்த டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 11 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்து பிபுள் சர்மா வெற்றிக்கு உறுதியாக இருந்தார்.

இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஐதராபாத் மோதவுள்ளது.