“அணு ஆயுத ஆற்றல் பெற்ற பாகிஸ்தான், இந்திய தலைநகர் டில்லியை, ஐந்து நிமிடங்களில் தாக்க முடியும்,” என, பாக். அணுசக்தி திட்டத்தின் தந்தையாக கருதப்படும், ஏ.கியு.கான் கூறியுள்ளார்.
பாக்.கில் அணு ஆயுத சோதனை நடந்து, 18 ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கான் பங்கேற்றார்; அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தான், 1998ல், அணு ஆயுத வல்லமை பெற்றது. 1984ம் ஆண்டிலேயே, இத்திறனை பெற்றிருக்க முடியும். பாக்.அணு ஆயுதம் தயாரித்தால், சர்வதேச நாடுகள், ராணுவ ரீதியில் தலையிடும் என்றும், உதவிகளை நிறுத்தக்கூடும் என்றும், அப்போதைய அதிபர் ஜியா உல் ஹக் பயந்தார். அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், 1984ல், அணு ஆயுத திட்டம் நிறைவேறாமல் போனது.
இந்திய தலைநகர் டில்லி மீது, பாகிஸ்தானின், ராவல்பிண்டி அருகிலிருந்து, ஐந்து நிமிடத்தில் தாக்குதல் நடத்தும் வல்லமையை பாக். பெற்றுள்ளது. என் சேவைகள் இன்றி, பாகிஸ்தானால், அணு ஆயுத சக்தி பெற்ற நாடாக உருவாகி இருக்க முடியாது. மிகக் கடினமான சூழ்நிலையில், அந்த சாதனையை நாம் படைத்தோம். இவ்வாறு அவர் பேசினார்.