ரயில், விமான டிக்கெட், ஹோட்டல் கட்டணம், செல்போன் கட்டணம் அதிரடி உயர்வில்..

அரை சதவீத சேவை வரி உயர்வு இன்று முதல் இந்தியா முழுவதும் அமுலுக்கு வருகிறது. இதனால் தொலைபேசி சேவை, ரயில், விமான டிக்கெட் கட்டணம் என்பன அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரிஷிகல்யாண் என்ற வேளாண் வளர்ச்சிக்கு மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு சேவை வரியில் கூடுதலாக அரை சதவீதம் செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.

இதனால் 14.5% ஆக உள்ள சேவை வரி இன்று முதல் 15% ஆக உயர்ந்துள்ளது. சேவை வரி உயர்வால் நுகர்பொருள் சேவைக்கான கட்டணங்கள் கணிசமாக உயரும்.

ரயில் டிக்கெட், விமான டிக்கெட், ஹோட்டல் கட்டணம், செல்போன் கட்டணம் போன்றவை அதிகரிக்கும்.

சேவை வரி உயர்வுக்கு வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திற்காக ஏற்கனவே சேவை வரியில் அரை சதவீதத்தை மத்திய அரசு உயர்த்தும் நிலையில், தற்போது க்ரிஷிகல்யாண் திட்டத்திற்கும் அரை சதவீதம் வரி செலுத்துவது கட்டாயமாக்கியுள்ளது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் 2.5% அளவுக்கு சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது.