இந்தியர்கள் குறிப்பாக மும்பை வாசிகளுக்கு தங்கள் மீதிருக்கும் அக்கறையை எண்ணி நெகிழ்ந்துள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த நசியா, 15 வயதாகும் இவரது மகள் சபா தாரிக் அகமது, ’வில்சன்ஸ் டிசீஸ்’ எனப்படும் அரிய வகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நோய் தாக்கியவர்களின் உடலில் அதிகளவு காப்பர் தங்கி விடுவதால் சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிடில் கல்லீரல், மூளை போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்துவிடும்.
தெற்கு மும்பையில் உள்ள ஜஸ்லோக் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சபாவின் சிகிச்சை செலவுகளுக்காக நசியாவின் சகோதரி சமூக வலைதளத்தில் நிதி உதவி கேட்டுள்ளார்.
விரைவில் அவர்களே எதிர்பாராத அளவிற்கு 1.5 லட்சம் வரை சபாவின் சிகிச்சைக்கு நிதியுதவி கிடைத்துள்ளது. பொதுமக்கள் தவிர சமூக ஆர்வலர்களும் ஜஸ்லோக் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களும் கூட நிறைய உதவி செய்துள்ளதாக சபாவின் தாயார் நசியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நசியா கூறுகையில் ” எனக்குத் தெரிந்தவர்கள் யாரிடமும் நீ பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என்று சொல்லி விடாதே என்று அறிவுரை கூறினர்.
ஆனால் நான் அப்படி பொய் சொல்ல விரும்பவில்லை. இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் நல்மனதுடையவர்கள். இந்தியர்களின் அன்பும் அக்கறையும் எங்களை நெகிழச் செய்கிறது” என்றார்.
விரைவில் சபாவுக்கான சிகிச்சைகள் தொடங்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.