அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய வங்கி மறுப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியினால் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் பொது மக்களின் நிதியை தமது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவதாக தெரிவித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், மத்திய வங்கியின் ஆளுநரோ அல்லது மத்திய வங்கியின் ஊழியர்களோ தமது தனிப்பட்ட தேவைகளுக்காக பொது மக்களின் ஒரு சதத்தினையேனும் பயன்படுத்தவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிர்வாகத்தினர் கடமை நிமித்தம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணங்களின் போது அதன் செலவீனத்தை மத்திய வங்கியே பொறுப்பேற்கும்.

இது அனைத்து நிறுவனங்களுக்கும், திணைக்களங்களுக்கும் பொதுவான ஒரு விடயமாகும். கடந்த காலங்களில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சில வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய வலய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பு, தெற்கு கிழக்கு ஆசிய மத்திய வங்கி ஆய்வு மற்றும் பயிற்சி மத்திய நிலையம் ஆகியவற்றினால் வருடாந்தம் நடத்தப்படும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இவ்வாறான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2014ம் ஆண்டு அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிர்வாகத்தினரின் உத்தியோகபூர்வ பயணங்களுக்காக 133.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டு 96.6 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37.2 மில்லியன் ரூபா குறைவாகவே செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.