ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் விசாரணை நீதிமன்ற நீதிபதி குன்ஹா 4 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்தார்.

ஆனால் இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இம்மனு மீதான விசாரணை கடந்த பெப்ரவரி 23-ந் திகதி முதல் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதமும் இன்று நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைவரும் தங்கள் வாதங்களை வருகிற 10ம் திகதிக்குள் எழுத்து பூர்வமாக சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது