பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, மேற்படி கொலை தொடர்பான ஒப்புதல் வாக்குமூலமொன்றை, நீதவான் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (10) வழங்கவுள்ளார்.
இந்நிலையில், மேற்படி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும் மேற்படி முன்னாள் பொறுப்பதிகாரி ஆகிய இருவரையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வியாழக்கிழமை (09) உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவை, இன்றைய (09) தினத்தில், மன்றில் முன்னிலைப்படுத்துமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கு, கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகிய இருவரும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், மேற்படி கொலை தொடர்பில், ஒப்புதல் வாக்குமூலமொன்றை வழங்க விரும்புவதாக, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, நீதவானிடம் தெரிவித்தார். இதனையடுத்தே, நீதவான் மேற்கண்டவாறு கூறினார்.