உதயங்க வீரதுங்கவின் சகோதரி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் சகோதரி நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

2006ம் ஆண்டு இலங்கை விமானப்படைக்கு மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பல கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் விசாரணை உதயங்க வீரதுங்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

உதயங்க வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவின் ஒன்றுவிட்ட சகோதரராவார்.

இந்த மோசடி தொடர்பில் வழக்கு விசாரணைகளுக்கான அழைப்பாணை ஒன்றை வழங்குவதற்காக உதயங்கவின் சகோதரி கமனி வீரதுங்க நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் உதயங்கவின் சொத்துக்களுக்கான அட்டர்னி அதிகாரமுடைய ருவான் சந்தன என்பவரும் நேற்று அழைக்கப்பட்டிருந்தார்.

மிக் கொடுக்கல் வாங்கல்களில் உதயங்க முக்கிய பங்குதரார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசாரணைகள் தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள பல தடவைகள் உயதங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் வெளிநாட்டில் தங்கியிருப்பதனால் விசாரணை நடத்தி வாக்கு மூலம்பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எதிர்வரும் 5ம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு உதயங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கம் அரசியல் ரீதியாக பழிவாங்குவதாகவும் தாம் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் உதயங்க வீரதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.