முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்க ஆகிய இரு அணிகள் இன்று மோதவுள்ளன.
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 3 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இன்று நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது.
இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. இதற்கு பழி தீர்க்கும் முனைப்பிலும் தென் ஆப்பிரிக்க அணி இன்று விளையாடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
முன்னதாக, செயின்ட் கிட்சில் நேற்று முன்தினம் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. அதில், சாமுவேல்சின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.