20ம் திருத்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
1978ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட விருப்பு வாக்கு முறைமை மற்றும் தொகுதிவாரி முறை ஆகியவற்றை இன்றைக்கு பொருத்தமான வகையில் 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக திருத்தம் செய்யப்படும்.
விருப்பு வாக்கு முறைமை மற்றும் விகிதாசார முறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.எனவே தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளது.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் காணப்படுகின்றன.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்ற யோசனைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இந்த யோசனைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
இதன்படி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட 1978ம் ஆண்டு அரசியல் சாசனத்தை ஒரே தடவையில் திருத்தி அமைப்பது பாரிய பிரச்சினையாக அமைந்துள்ளது.
அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் திருத்தங்கள் செய்து அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.