தனக்கு தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு கோத்தபாய கோரிக்கை

தனக்கு தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், அவரது வாகன தொடரணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதலை நடாத்திய வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள தனது வீட்டிலிருந்து அலரிமாளிகைக்கு சென்று கொண்டிருந்த வேளையில், பித்தளை சந்தியில் வைத்து இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக கோத்தாபய ராஜபக்ஷ சாட்சியளித்த போது தெரிவித்துள்ளார்.

வெடிப்பு சம்பவத்தின் பின்னர் தீ பிளம்பொன்று உருவாகியதாகவும், தான் வீசுண்டு வீழ்ந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.