தற்போது ஊடகவியலாளர்களுக்கு குறைந்தளவு சம்பளமே வழங்கப்படுகின்றது, ஆனால் இந்த நிலை மாற வேண்டும், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிய சம்பளம் வழங்கப்பட வேண்டும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்போது நாட்டில் பல ஊடகவியலாளர்கள் குறைந்த அளவு சம்பளத்தில் அதிக வேலைகளை செய்கின்றனர், மேலும் பல நிறுவனங்கள் இவர்களுக்குரிய சம்பளத்தை முறையாக வழங்குவதும் இல்லை என குற்றம் சுமத்தினார்.
ஒரு ஊடகவியலாளருக்கு குறைந்த பட்சம் எவ்வளவு சம்பளம் வழங்க வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும், அதை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், குறைந்த அளவு சம்பளம் வழங்கும் ஊடக நிறுவனங்களை கண்காணிப்பதற்காக குழு ஒன்றை நியமிக்க உள்ளதாகவும், தொலைக்காட்சி மற்றும் வானொலி என அனைத்து ஊடக நிறுவனங்களும் இதில் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
தகவல் அறியும் சட்டமூலத்தில் உள்ள விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்களுக்கு இது பற்றி பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்தார்.
அரச சட்டத்தை மீறி ஊடகவியலாளர்களுக்கு குறைந்தளவு சம்பளம் வழங்கும் அனைத்து ஊடக நிறுவனங்கள்மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.