சிறை செல்ல வேண்டி ஏற்பட்டாலும், மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கோர முடியாது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தது.
பொதுபலசேனா அமைப்பினால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாதிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மத நிந்தனை வழக்கு விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பெல்பிட்டிய முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
ஜமாத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக், சிங்கள மொழியில் ஆற்றிய ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஜமாத்தின் செயலாளர் உட்பட தலைமை நிர்வாகத்தின் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களிடம் சென்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத், மன்னிப்புக் கோரினால் உடனடியாக வழக்கு முடிவுக்கு வந்து விடும் என்று நீதிபதி தெரிவித்தார். இந்த கருத்தை தவ்ஹீத் ஜமாத் தரப்பு சட்டத்தரணிகள் நிராகரித்ததுடன் குறித்த உரையில் தவறுதலாக பேசப்பட்ட விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் தவ்ஹீத் ஜமாத் தரப்பு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலையில் எக்காரணம் கொண்டும் மகாநாயக்க தேரர்களிடம் சென்று மன்னிப்புக் கோர முடியாது எனவும், அது சட்டத்திற்கு உட்பட்டதும் அல்ல எனவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர். இதனால் தொடர்ந்தும் வழக்கை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என திட்டவட்டமாக தவ்ஹீத் ஜமாத் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
குறித்த வழக்கு தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்புக் கேட்க்காவிட்டால் சிறை தண்டனை தான் கிடைக்கும் என்றால் சிறை செல்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதையும் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றோம் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையினை ஓகஸ்ட 6ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரனையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் அடங்கிய குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.