துறைமுக அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுப்பதில் சிக்கல்

துறைமுக அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்து செல்வதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்தி பணிகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில், துறைமுக அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்து வரும் சீன நிறுவனம் இலங்கை அரச அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தும் நிகழ்விலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துறைமுக நகர அபிவிருத்தி தொடர்பில் திட்டமிடப்பட்ட காலம் முதல் அது முடிவடையும் காலம் வரையில் சேரும் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

துறைமுக அபிவிருத்தி நிர்மாண பணிகளுக்காக கோரப்படும் மின்சார தேவையினை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த திட்டத்திற்காக தேவைப்படும் நீரினை பெறுவதற்காக களனி கங்கை மற்றும் களு கங்கையின் நீர் பெறும் சகல இடங்களிலும் தற்போது நீர் பெறுவதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, துறைமுக திட்டத்திற்கு அவசியமான குறித்த 3 சேவைகளையும் வழங்குவதற்கு மாற்று திட்டம் தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்குற்றச்சாட்டுகளினால் சீன அதிகாரிகளின் முன்னிலையில், இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.