மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் மேலும் சில உற்பத்திகளுக்கு வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்த பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, அரசாங்கத்திற்குள் இருப்பதால்தான் இவற்றை செய்ய தங்களால் இயலுமாக இருப்பதாகவும் கூறினார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“டீசலுக்கான வரி விதிக்க முடியும். பங்கரிங் விற்பனையில் எண்ணெய் விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அனுமதிப் பத்திர கொடுப்பனவாக 100 டொலர்களே முழு வருடத்திற்கும் செலுத்தப்படுகின்றது. இந்த வணிக நடவடிக்கையில் பெருமளவு இலாபம் ஈட்டக்கூடிய முயற்சிகள் என்ற போதிலும் வெறும் 100 டொலர்களே கட்டணமாக உள்ளது. எனவே இந்த கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
அதேபோன்று இலங்கைக்கு எவ்வித வரியுமின்றியே எஞ்ஜின் ஒயில் இறக்குமதி செய்யப்படுகின்றது. இவற்றிற்கும் வரி விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அத்துடன் பிறேக் ஒயிலும் வரியற்ற நிலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. இறுதி நுகர்வோனுக்கு கிடைக்கப்பெறும் வரை அதில் குறையில்லை.
குறிப்பாக எஞ்ஜின் ஒயில் பல்வேறு பெயர்களில் நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்படுகின்றது. இதனால் அரசாங்கத்திற்கு வருமானம் இழக்கப்படுகின்றது என்பதோடு சாதாரணமாக பயன்படுத்தப்படும் வாகனங்கள், இயந்திரங்கள் வரை பாதிக்கக்கூடும். எனவேதான் இவற்றிற்கும் வரிவிதிப்பதற்கு யோசனை முன்வைத்துள்ளோம்.
ஒவ்வொரு அமைச்சுக்களில் இருந்தும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வரி விதிப்பதற்கான வழிமுறைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம். இதுவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சார்பான திட்டமாகும். அரசாங்கத்திற்குள் இருந்துதான் மக்களுக்காக இவற்றை செய்ய முடியும் என்பதோடு மிகவும் வெற்றிகரமான முறையிலும் அவற்றை நிறைவேற்றவும் முடியும் என்றார்.