நடைபவனியில் ஈடுபடவோ, எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவோ நான் யாருக்கும் அனுமதியளிக்கவில்லை.

அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுக்கு எதிராக நடைபவனியில் ஈடுபடவோ, எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் அனுமதியை வழங்கும் விதமாக எந்தவொரு அறிவிப்பையும் தான் மேற்கொள்ளவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படாதிருந்தால், கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனியில் கலந்துகொள்வதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்ததாக கூட்டு எதிர்க் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன ரணதுங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நேற்று இக்கருத்து  பத்திரிகைகளில் முன்பக்க செய்தியாக வெளிவந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பிரசன்னவின் கருத்தை வெளியிட்ட பத்திரிகைகள் இன்று ஜனாதிபதியின் மறுப்பை பிரதான செய்தியாக வெளியிட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்திருந்ததாகவும் அப்பத்திரிகை மேலும் விளக்கிக் கூறியுள்ளது.