ஒன்றிணைந்த எதிர் கட்சியின் பாத யாத்திரைக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை பாத யாத்திரை மேற்கொள்ளவிருந்த நிலையில், இதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நாளை காலை கண்டியில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தையும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் வைத்துக் கொள்ளுமாறு, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் கபீர் கசீம் ஆகியோருக்கு நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிர் கட்சியின் பாத யாத்திரை மாவனல்ல நகருக்குள் நுழைவதற்கு தடை செய்து மாவனல்ல நீதவான் எல்.ஏ.மஹிந்த இன்று தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மாவனல்ல காவற்துறை பொறுப்பதிகாரி எம்.டீ.டீ.நிலங்க, நீதிமன்றத்தில் கோரிய வேண்டுகோளை கருத்தில் கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மாவனல்ல நகரில் கட்சி விரிவாக்கும் செயற்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் ஜனாதிபதி தலைமையில் மாவனல்ல நகரில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் நகருக்குள் பொது ஒழுங்கு பாதுகாப்பு கருதி தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அவர், நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இவற்றை கருத்தில் கொண்ட நீதிபதி குறித்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.