வெளிநாட்டு மதுபானங்களின் சட்டவிரோத இறக்குமதியால் திறைசேரிக்கு பாரியளவு நட்டம்.

வெளிநாட்டு மதுபானங்களின் சட்டவிரோத இறக்குமதியால் திறைசேரிக்கு 6 ஆயிரம் மில்லியன் ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பலரை சுற்று வளைக்கும் நடவடிக்கையில் நிதி அமைச்சின் கீழ் இயங்கும் விசேட போதைப்பொருள் சோதனைப் பிரிவு ஈடுபட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களின் கடத்தலை கட்டுப்படுத்தும் வகையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த பரிந்துரைக்கு அமைய குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத மதுபான இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீண்டகால விசாரணைகளை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் தெமட்டகொட பகுதியில் வைத்து பாரிய அளவான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், கலால் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.