அனுரவின் பகிரங்க சவாலுக்கு வீரவன்சவிடமிருந்து பதில் சவால்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிற்கு, ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பகிரங்க சவால் ஒன்றினை முன்வைத்துள்ளார்.

குறித்த சவாலில் கூறியிருப்பதாவது, தேர்தல் ஒன்றில் தனித்து போட்டியிட்டு வெற்றியீட்டிக் காட்டுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அனுரகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தனது சொந்த அரசியல் கட்சியில் நகரசபைத் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு முடிந்தால் விமல் வீரவன்ச வெற்றியீட்டிக் காட்டட்டும். இது நான் அவருக்கு வழங்கும் சவாலாகும்.

நாய்களின் உடலில் ஒட்டியிருக்கும் உன்னிகள் நாயை விடவும் பெரியது என கருதிக்கொள்ளுமாம், அதேபோன்று சில அரசியல் கட்சிகளுக்குள் புகுந்து கொண்டு தலைவர்களின் விசுவாசத்திற்குரிய செல்ல பிராணியாக மாறியுள்ள சில தரப்பினர் ஜே.வி.பி கட்சிக்கு விடுக்கும் சவால்களை நாம் பொருட்படுத்துவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில்,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசன்ச கூறுகையில்,

மேற்குறித்த சவால் உலக நகைச்சுவையாகும். எனக்கு சவால் விடுக்கும் முன்னர் அனுர குமார திஸாநாயக்க சற்று சிந்திக்க வேண்டும்.

அதாவது, கடந்த மாகாணசபை தேர்தலின் போது ஒரு ஆசனத்தையேனும் ஜே.பி.பி.யினால் வெற்றியீட்டிக்கொள்ள முடியவில்லை.

எனினும் தேசிய சுதந்திர முன்னணி ஓரு ஆசனத்தை வென்றிருந்தது.

இவ்வாறான ஓர் நிலைமையில் தேர்தலில் வெற்றியீட்டிக் காட்டுமாறு விடுக்கும் சவால் நகைப்பிற்குரியது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.