இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அது தொடர்பில் பொது வாக்கெடுப்பை நடத்தி நாட்டு மக்களின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென பிவிதுறு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இந்த பாலத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எச்சரித்த, அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, நாட்டின் கலாசாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்படுமென குறிப்பிட்டார்.
“இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்ற இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற பொது முயற்சியாண்மைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் கபீ்ர் ஹாசிம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் அவ்வாறான ஒரு விடயம் நடைபெறவில்லை என்ற வகையிலேயே கதைக்கின்றனர். நாட்டு மக்களுக்கு பொய்யுரைக்க வேண்டாமென நாம் தெரிவிக்க விரும்புகிறோம். இந்திய போக்குவரத்து அமைச்சர் அந்நாட்டு நாடாளுமன்றில் உண்மையை தெரிவித்துள்ளார். யுத்தக்குற்ற விடயம், எட்கா உடன்படிக்கை, அனுமன் பாலம் ஆகியன தொடர்பில் நாட்டு மக்களுக்கு பொய்யுரைத்துவிட்டு சர்வதேசத்திற்கு உண்மையை தெரிவிக்கும், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பொம்மை அரசாங்கமே தற்போது செயற்படுகின்றது.
இந்த பாலம் அமைக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும். இந்தியாவுடன், இலங்கை இணைக்கப்படுமென கூறப்பட்டாலும், தமிழகத்தையும் நாட்டின் வடக்கையும் இணைக்கும் விடயமே இங்கு நடைபெறப்போகிறது. இந்த பாலம் அமைக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தில் இருந்து மக்கள் படையெடுப்பார்கள்.
நாட்டின் சனத்தொகையில் மாற்றம் ஏற்படும். சிங்கள பௌத்த மக்களுக்கான இந்த நாடு இல்லாமல் போகும். மிகப்பெரிய சுகாதார பிரச்சினை ஏற்படும். ஆகவே இந்த பாலம் அமைக்கப்படுமாயின் மக்கள் கருத்துக்கணிப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.
அவர்களது அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடின் இந்த ஜனநாயக விரோத செயலுக்கு மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கும் தள்ளினால், மண்ணில் விழும் ஒவ்வொரு துளி உதிரத்திற்கும் இந்தியாவிடம் தலைகுனிந்து தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டி ஏற்படும்.