ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்கும் தயங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எச்சரித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள நிஷாந்த எம்.பி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும், தலைமைத்துவத்தை விமர்சித்தும் செயற்பட்டமைக்காக அக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தலைமைத்துவத்தை விமர்சித்ததாக கட்சியிலிருந்து தன்னை நீக்க முடியாது எனக் கூறியுள்ள சனத் நிஷாந்த, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியை நீதிமன்றத்திற்கு கொண்டுவர சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்