முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முடிவடைந்ததன் பின்னரே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், கடற்படை பேச்சாளரான கெப்டன் அக்ரம் அலவி தெரிவிக்கையில், ‘யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததன் பின்னர் அவர் மீதான விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன’ என்றார்.
‘ராஜபக்ஷவுக்கு, சம்பளம் வழங்குவதையும் கடற்படை நிறுத்திவிட்டது. நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு அவரை கைது செய்ததும் அவர் மீதான கடற்படையின் விசாரணைகள் நிறுத்தப்பட்டன.
நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னரே, கடற்படையின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்’ என்றும் அவர் கூறினார்.