அவுஸ்திரேலியா அணியை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டி சில்வா கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் காலி மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் 229 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இலங்கை தொடரை 2-0 என கைப்பற்றி உள்ளது.
இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ‘ஒயிட்-வாஷ்’ செய்ய வேண்டும் என்று இலங்கை அணிக்கு முன்னாள் அணித்தலைவர் அரவிந்த டி சில்வா அவுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த இளம் அணியின் செயல்பாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
கடந்த சில மாதங்களாக தடுமாற்றத்துடன் இருந்தாலும் இந்த வெற்றி அவர்களுக்கு அதிக தன்னம்பிக்கையை அளிக்கும். அவர்களிடம் நல்ல திறமை இருக்கிறது. இது போன்ற வெற்றியே அவர்களுக்கு அதை நன்றாக புரிய வைக்கும்.
அவுஸ்திரேலியா போன்ற ஒரு அணியை முழுமையாக வெற்றி கொள்ள இது போன்ற ஒரு சிறந்த தருணம் அமையாது.
இலங்கை வீரர்கள் போட்டிக்கு செல்லும் முன்பு அவர்களிடம் பயம் இல்லாத கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்று கூறினேன். அதன் படி சிறப்பாக செயல்பட்டனர்.
அதேபோல் அணித்தலைவர் மேத்யூஸின் செயல்பாடும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. அவரின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியிடம் சிறப்பான துடுப்பாட்டம் மற்றும் அச்சுறுத்தும் பந்துவீச்சு உள்ளது. இதனால் கடைசி டெஸ்டில் அந்த அணி மீண்டு வந்து மிரட்டலாம் என்று கூறியுள்ளார்.
இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 13ம் திகதி கொழும்பில் தொடங்குகிறது.