அதிவேக வீதியின் முதல் பெண் பஸ் சாரதி கைது!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் அத்துமீறி பிரவேசித்து தலைவரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தி இலங்கையின் அதிவேக வீதியின் முதல் பெண் பஸ் சாரதியையும் மேலும் நான்கு பேரையும் நாரஹன்பிட்டி பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

இதனையடுத்து கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள், தலா 2000 ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது தகவல் தந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள், சஜிந்தா என்ற அதிவேக வீதியின் முதல் பெண் பஸ் சாரதி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்கவே போக்குவரத்து ஆணைக்குழு தலைவரை சந்திக்கசென்றதாக குறிப்பிட்டனர்.

குறித்த பெண் சாரதி, ஏற்கனவே அதிவேக வீதியில் பயணம் செய்வதற்காக தற்காலிக அனுமதியை வைத்துள்ளநிலையில், சொந்தமாக பஸ் ஒன்றை கொள்வனவு செய்தால் நிரந்தர அனுமதியை தருவதாக ஆணைக்குழுவின் தலைவர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து பாரிய கடன் சுமைகளுடன் பஸ் ஒன்றை குறித்த பெண் கொள்வனவு செய்த நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் நிரந்தர அனுமதியை தர மறுத்து விட்டதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.