சரத் அப்றூவினது மரணத்தில் துலங்காத மர்மம்.. பிரேத பரிசோதனை இன்று.

உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சரத் அப்றூவின் மரணம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதியரசர் சரத் அப்றூ, தன்னுடைய வீட்டின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து, களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவரது மரணம் தற்செயலாக ஏற்பட்டதா? அல்லது கொலையா? என்பது குறித்து இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. அதன் காரணமாகவே குறித்த இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றது, அவரது பிள்ளைக்கு மேலதிக வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் அவரது கணவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

நீதவான் மற்றும் அரச பகுப்பாய்வு அதிகாரியின் பரிசோதனை நேற்று நடைபெற்றதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்