பொலிஸ் மா அதிபரின் இடமாற்ற அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தனது பொலிஸ் மா அதிபர் பதவியை பொறுப்பேற்ற பின்னர், கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளமையானது சட்டத்துக்கு முரணானது எனவும் அதிகாரமற்ற அறிவிப்பு என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொலிஸ் மா அதிபராக பொறுப்பேற்ற பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது, கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தனவை இடமாற்றம் செய்ய வேண்டி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் இந்த அறிவிப்பு சட்டத்துக்கு முரணானது எனவும், இது ஒரு உரிமை மீறல் எனவும் தெரிவித்து இந்த அறிவிப்பின் பிரகாரம் பொலிஸ் மா அதிபர் செயற்படுவதை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறும் வேண்டி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன முன்வைத்திருந்தார்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனு பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் மற்றும் நீதிபதி அனில் குணரத்ன ஆகிய நீதிபதிகள் குழுவினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உயர் பதவியில் வகிக்கும் பொலிஸ் அதிகாரியொருவரை இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் இல்லையெனவும்,  பொலிஸ் ஆணைக்குழுக்கே அதிகாரம் உள்ளது எனவும் விசாரணையின் பின்னர் பிரதம நீதியரசர் அறிவித்துள்ளார்.

இந்த அடிப்படைக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் செயற்படுவாராயின் அது சட்டத்துக்கு முரணானது எனவும், அதிகாரம் அற்ற ஒரு அறிவிப்பு எனவும் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் விடுத்த அறிவிப்பின் படி செயற்படுவாராயின் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தனவுக்கு நீதி கோருவதற்கு உரிமையுடையவர் எனவும் உயர் நீதிமன்ற நீதியரசர் அடங்கிய குழு மேலும் அறிவித்தல் விடுத்துள்ளது.