ஜனாதிபதி மைத்திரிபால மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, விசாரணைகள் ஆரம்பம் – ஆஸி.ஊடகம் செய்தி.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடந்தகால ஆட்சியில் இலங்கை அதிகாரிகளுக்கு அவுஸ்திரேலியா பிரபல நிறுவனமொன்று பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாக வழங்கியதாக அவுஸ்திரேலியா முக்கிய ஊடகங்கள்  மேற்கோற்காட்டி நேற்று(24) செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்த வேளை குறித்த அந்த நிறுவனத்திடமிருந்து அரசியல் நன்கொடையை கோரியதாகவும், அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அந்த நாட்டின் சமஷ்டி பொலிஸார் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான ‘ஸ்னோவிமவுண்டன்ஸ் என்ஜினியரிங் நிறுவனம்’ ஊழல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளமை பெயர்பொக்ஸ்(Fire Box) ஊடகம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்புபட்டுள்ளார்.

குறிப்பிட்ட நிறுவனத்தின் வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கையில் கழிவு நீர் திட்டமொன்றை பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியுள்ளனர்.

இதேவேளை அமைச்சராகவிருந்த தற்போதைய ஜனாதிபதி வைத்திரிபால சிறிசேனவும் அவரது ஆலோசகரும் இந்த திட்டத்திற்காக அரசியல் நன்கொடை கோரியுள்ளமை நிறுவனத்தின் மின்னஞ்சல்கள் மூலம் தெளிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.