மருந்துப் பொருட்களுக்கான விலைகள் விரைவில் குறையும் – ராஜித.

மருந்துப் பொருட்களுக்கான விலைகள் இரண்டு வாரங்களில் குறைவடையும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில்  மேலும் கூறுகையில்,

எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் மருந்துப்பொருட்களின் விலைகள் குறைவடையும். மருந்துப் பொருள் மாபியா மூலம் எவரும் கொள்ளையிட அனுமதிக்கப்பட முடியாது.

மருந்துப் பொருள் இறக்குமதிகளில் இடம்பெற்று வரும் மோசடிகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படுகின்றது. மருந்துப் பொருள் நிறுவனங்களுக்கு செவிசாய்க்காது சோசலிச நாடுகளிடமிருந்து தரமான மருந்து பொருட்கள் தருவிக்கப்படும்.

இதன் அடிப்படையிலேயே ரஷ்யாவிடமிருந்து புற்று நோய்க்கான மருந்து இறக்குமதி செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

வீதியில் இறங்கி பதாகைகளை தூக்கிக் கொண்டு போராட்டம் நடத்துவதன் மூலமோ அல்லது பத்திரிகைகளில் எழுதுவதன் மூலமோ மருந்துப் பொருளுக்கான மாபியாவை இல்லாதொழிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.