பிரதமர் ஒருவர் எப்பிரதேசத்திலிருந்தும் வரலாம்-ஜனாதிபதி

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தான் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையையும் செய்ய வில்லையெனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் பிரதமர் ஒருவர் வரலாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான அரசியல் மற்றும் சமூக மாற்றத்துக்காக உயிரைக் கொடுத்து உழைப்பதற்கு தான் தாயர் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சமூக மாற்றமொன்றுக்காக உழைத்த எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்க போன்றவர்களின் தியாகம் மீண்டும் நாட்டுக்குத் தேவைப்படுகின்றது. சமூக மாற்றங்களுக்காக உழைத்த உலக தலைவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தனர். தனது உயிரையும் தியாகம் செய்யும் நிலைக்கு சிலர் தள்ளப்பட்டனர்.

இருப்பினும், எந்தவொரு சவாலின் முன்னாலும் பின்வாங்காமல் சகல சமூக மற்றும் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு நாட்டுக்குத் தேவையான சமூக, அரசியல், பொருளாதார மாற்றத்தை நோக்கி தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

“ஒன்றுபடுவோம்-வெற்றிபெறுவோம்-பணியாற்றுவோம்” எனும் கருப்பொருளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் வகையிலான கூட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதன் ஆரம்ப கூட்டம் இன்று தம்பதெனியவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.