கொட்டதெனியா சேயா சௌதமி என்ற சிறுமி, பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு நேற்று(30) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மூன்று பேர் கொண்ட நீதியரசர்கள் குழு இதனை விசாரித்தது.
இதன்போது குறித்த மாணவரை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய காவற்துறை அதிகாரி குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு, காவற்துறை மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், தம்மை கைது செய்து குற்றத்தை ஒப்புகொள்ளுமாறு கோரி நீண்ட நாட்களாக துன்புறுத்தப்பட்டதாக அவர் தமது மனுவில் மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இதற்கு நட்ட ஈடாக ஒரு கோடி ரூபாவை அவர் கோரியுள்ளார்.
துன்புறுத்தலை புரிந்த காவற்துறை அதிகாரியின் உருவப் படத்தையும் குறித்த மாணவர் தமது மனுவுடன் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.