மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மற்றும் தூதரகத்தின் 2வது செயலாளர் ஆகியோர் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து இன்று(04) ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
மஹிந்தவுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தினேஷ் குணவர்தன நாடு திரும்ப இருந்தமையால் அவரை வழியனுப்ப வந்த போதே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மஹிந்தவிற்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்திருந்த தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களே குறித்த தாக்குதலை நடத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமுற்ற மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் அவரது 2வது செயலாளர் ஆகியோர் தற்போது கோலாலம்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆர்பாட்டக்காரர்கள் மஹிந்த எங்கே என தூதரிடம் கேட்டுள்ளதாகவும், இதற்கு பதிலளித்த தூதுவர் பொலிஸாரிடம் தொடர்பு கொள்ளவும் என கூறியுள்ளார்.
இதன் பின்னரே தூதுவரை ஆர்பாட்டக்காரர்கள் தாக்கினார்கள் என்றும்அவரது நெற்றியில் இருந்து இரத்தம் வடிந்ததாகவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவருடன் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதிநிதிகளான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் மேல்மாகாண அமைச்சர் உபாலி கொடிகார மற்றும் மஹிந்தவின் பிரத்தியேக செயலாளர் உதித்த லொக்குபண்டார ஆகியோர் நாளை(05) நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.