
கடிதத்தால் கைதிலிருந்து தப்பிக்கொண்ட இராஜாங்க அமைச்சர்
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து தரும்படி கோரி நபர் ஒருவர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவிடம் 54 இலட்சத்தை வழங்கியுள்ளார்.
எனினும் வாகனத்தையோ, பணத்தையோ இராஜாங்க அமைச்சர் உரியவரிடம் இதுவரை திருப்பிக்கொடுக்காமல் அந்தப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் பாலித ரங்கே பண்டாரவுக்கு எதிராக கொழும்பு உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , இராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்திற்கு வருகைத் தராததால் அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி என்.வீ.கருணாதிலகவிடம் கோரிக்கை விடுத்த போது நீதிபதி அதனை மறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் தனக்கு பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டியது அவசியம் என தெரிவித்து இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார பாராளுமன்ற செயலாளரின் கையெழுத்துடன் கடிதம் ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதால், இவரை கைது செய்ய அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி,
குறித்த வழக்கை அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
அத்துடன் குறித்த வழக்கை விசாரிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறாத தினங்கள் தொடர்பாக அறிவித்தல் தருமாரு நீதிபதி பாராளுமன்ற செயலாளரிடம் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
