மஹிந்தானந்தவுக்கு எதிராக நீதிமன்றம் அழைப்பாணை..

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு, சுமார் 53 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்குவதாக கூறி அதனை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பிலேயே மஹிந்தானந்தவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி நேற்று(08) குறித்த வழக்கை ஆராய்ந்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இருவரையும், எதிர்வரும் 27ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக, பிரியந்த சந்திரசிறி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.