தென் கொரியா நில நடுக்கத்தில் இலங்கையர்களும் சிக்கியுள்ளனரா எனக் குறித்து ஆராய்வு.. (Update)

தென் கொரியாவில் நேற்று(12) ஏற்பட்ட நில அதிர்வில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாதிப்பு ஏற்பட்ட பிரதேசங்களில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் சேகரிப்பதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் உப்புல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

25 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கை மக்கள் தென் கொரியாவில் பணி புரிந்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த நில அதிர்வில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் உறுதி செய்யப்பட்ட எந்த ஒரு அறிக்கையும் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை.

6 நபர்கள் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான கிபோன்ஜு பிரதேசத்தின் 4 அணு மின் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாவது நில அதிர்வு 5.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தென் கொரியாவின் தென்மேற்கு பகுதிகளே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இரண்டாவது முறை ஏற்பட்ட நில அதிர்பு 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1978 ஆம் ஆண்டிற்கு பின்னர் தென் கொரியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நில அதிர்வு இதுவென அந்த நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளது.