இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அவர் சமூகமளிக்காமையினால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்ததாக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இவ்வாறான முறைப்பாடொன்றை தாக்கல் செய்ய அதிகாரம் இல்லை என்று, நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள் குழாம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.