தொடரும் ‘மெர்ஸ்’ தொற்றும் பலியாகும் உயிர்களும்

தென்கொரியாவில் புதிய வகை ‘மெர்ஸ்’ என்ற மூச்சு திணறல் நோய் பரவி வருகிறது. அதனால் அங்கு பலர் உயிரிழக்கின்றனர். ‘மெர்ஸ்’ என்ற வைரஸ் கிருமியால் இந்த நோய் ஏற்படுகிறது. எனவே, தென் கொரியாவில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நோய் தாக்கியவர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். சிபோல் நகரில் உள்ள சாம்சங் மருத்துவ மைய ஆஸ்பத்திரியில் மெர்ஸ் நோய் தாக்கிய 70 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 62 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரையும் சேர்த்து பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

‘காம்சங்’ ஆஸ்பத்திரியில் தான் மெர்ஸ் நோய் தாக்கிய ஏராளமானவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். எனவே, அங்கு சிகிச்சை அளிக்கும் 2 டாக்டர்கள் மற்றும் 3 நர்சுகளையும் இந்த நோய் தாக்கியுள்ளது.

எனவே அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், அங்கு பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று வரும் 400 நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மருத்துவ ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த தகவலை ஆஸ்பத்திரி தலைவர் சாங் ஜே–ஹூ தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் இதுவரை 145 பேர் ‘மெர்ஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.