சட்டமருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகரவின் முன் பிணை கோரும் மனுவுக்கு பச்சை சமிஞ்சை.

பிரபல றக்பி வீரர் வஸீம் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் சட்டமருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகரவின் முன் பிணை கோரும் மனுவுக்கு எதிர்மனு தாக்கல் செய்வதற்காக சட்டமா அதிபருக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் உடற்கூறுகள் பகுப்பாய்வுக்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது.

முன்னாள் சட்ட மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகரவின் பொறுப்பில் குறித்த உடற்கூறுகள் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போனதன் காரணமாக அவர் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.

எனினும் குறித்த வழக்கில் தான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் ஆனந்த சமரசேகர, உச்ச நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்று சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட போதிலும், ஒக்டோபர் மாதம் 24ம் திகதி குறித்த மனு மீதான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கிடையே குறித்த மனு தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் எதிர்மனு தாக்கல் செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு மேலும் உத்தரவிட்டுள்ளது.