பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் – சுஷ்மா இனது சூடான ஐ.நா பேருரை.

பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டோர், சுதந்திரமாக உலவக்கூடிய நாடுகள், நம்மிடையே உள்ளன. “பயங்கரவாதிகளுக்கு உதவும் நாடுகளை, தனிமைப்படுத்த வேண்டும்,” என, ஐ.நா. பொதுச் சபையில், பாகிஸ்தானுக்கு, வெளியுறவு அமைச்சரும், பா.ஜ. மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., பொதுச் சபையில், நேற்று(26) சுஷ்மா சுவராஜ் பேசிய உரையில்;

மனித உரிமை மீறப்படுவதாக, பிறரை குற்றஞ் சாட்டுவோர், தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும். தங்கள் நாட்டில், எத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறோம் என்பதை உணர வேண்டும். பாகிஸ்தானில் உள்ள பலுாச் இன மக்கள் மீது, மிக மோசமான முறையில், கொடூரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

காஷ்மீரை அபகரிக்க வேண்டும் என்ற கனவை, பாக்., கைவிட வேண்டும். ஜம்மு – காஷ்மீர் மாநிலம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில், யாரும் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினால், காஷ்மீரை பெற்று விடலாம் என, பாகிஸ்தான் தப்புக் கணக்கு போடுகிறது.

 பாகிஸ்தான் உடன் பேச்சு நடத்த, நிபந்தனைகள் விதிப்பதாக கூறுகின்றனர். என்ன நிபந்தனைகளை நாங்கள் விதித்தோம்? பா.ஜ. அரசு பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, நிபந்தனைகளை முன்வைத்தா, பாக்’கிற்கு அழைப்பு விடுத்தோம்? பாக். தலைநகரில் நடந்த ஆசிய மாநாட்டுக்கு, நிபந்தனைகள் விதிக்கப்பட்டதா? பாக்’இல், பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்த போது, நிபந்தனை விதித்தாரா?

 பாகிஸ்தானுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண, பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்தது. முன் நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல், நட்பு அடிப்படையிலேயே, இதை இந்தியா செய்தது. ஆனால், அதற்கு பரிசாக, பதன்கோட், யூரி பகுதிகளில், பாக்., பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது.

ஐ.நா. பொதுச் சபையால், தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டோர், சில நாடுகளில் சுதந்திரமாக உலவுகின்றனர். அந்நாடுகளில், பயங்கரவாதிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாததால், அடுத்த நாடுகளில் விஷ வித்துக்களை விதைக்கின்றனர்.

பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் பேசும் நாடுகளை கண்டறிந்து, உலக அரங்கில், அவற்றை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேசினார்.