எல்லை நிர்ணயம் குறித்த இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு

எல்லை நிர்ணயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க சர்வகட்சி மாநாடு நடத்தப்படும் என உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

எல்லை நிர்ணயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இதற்கு முன்னதாக பரிந்துரை செய்யப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கைக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன.

மீளவும் அவ்வாறான ஓர் நிலைமை உருவாவதனை தவிர்க்கவும், ஜனநாயகத்தை முழு அளவில் உறுதிப்படுத்தவும் குறித்த இந்த சர்வகட்சி மாநாடு நடத்தப்படவுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 15ம் திகதி அளவில் எல்லை நிர்ணய இறுதி அறிக்கை தமக்குக் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சர்வகட்சி மாநாடு நடத்தும் திகதி பற்றி தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.