எதிர்வரும் 2017ம் ஆண்டில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதமளவில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கும் என சுஜீவ சேனசிங்க நேற்று(05) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
வரிச் சலுகை பெற்றுக் கொள்வது குறித்த விண்ணப்பப்படிவம் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றால், இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையில் பாரிய வளர்ச்சி ஏற்படக்கூடும். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சில விடயங்களில் கவனம் செலுத்தத் தவறியமையினால் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீனா இலங்கையில் முதலீட்டு வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் நிறுவ உள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.