முன்னாள் ஐ.ஜி.பிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை..

முன்னாள் பொலிஸ்மா அதிபரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இலங்கைத் தூதுவருமான மஹிந்த பாலசூரிய, பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழு முன்னிலையில், இன்று(10) ஆஜராகுமாரே அவருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் நால்வருக்கு, சட்டவிரோதமான முறையில் பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு அனுமதியளித்தார் என்ற   குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர், விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இந்தச் சட்டவிரோதமான நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்துக்கு 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அவைத் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கே, அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான மொஹமட் முஸ்ஸமில், சிசிர குமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வருக்கு 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலும் ஆயுதத்துடன் கூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.