வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 800க்கும் அதிகமான சொகுசு வாகனங்களுக்காக விசாரணையை நிறுத்துமாறு சுங்க பணிப்பாளர் நாயகம் உத்தவிட்டுள்ளார்.
மேற்குறித்த இந்த உத்தரவினால் சுங்க பிரிவு அதிகாரிகள் கடுமையான சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களின் பெறுமதியை குறைவாக காட்டி நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த இந்த விசாரணை நிறுத்தப்பட்டமையினால் சுங்க வரியாக அறவிடப்பட வேண்டிய 400 கோடி ரூபாவை இழக்க நேரிட்டுள்ளதாக அரசாங்க தொழிற்சங்க பிரதான செயலாளர் W.R.P.விஜேகோன் தெரிவித்துள்ளார்.
சுங்க பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவினை கடந்த 21ஆம் திகதி சுங்க பணப்பாளர் பீ.ஆர்.அத்துகோரளவினால் சுங்க அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வெளியிட்ட 1901/03 என்ற வர்த்தமாணி அறிவித்தலை மீறி சுங்க பணிப்பாளர் நாயகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விலை மதிப்பீடு செய்வதற்காக சுங்க பிரிவில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளும் 800க்கும் அதிகமான வாகனங்களில் பென்ஸ், ஆடி, BMW, ரேன்ஞ் ரோவர் போன்ற வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுங்க பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவினால் இந்த வாகனங்களின் மதிப்பீடு பெறுமதியை மதிப்பீடு செய்து அதற்காக சுங்க வரியை அறிவிடும் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி உத்தரவிற்கமைய சுங்க பிரிவு அதிகாரிகளுக்கு இந்த வாகனத்தின் பெறுமதியை தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சிடம் கேட்டுக் கொள்வதாக W.R.P.விஜேகோன் தெரிவித்துள்ளார்.