நுரைச்சோலை அனல் மின் நிலையக் கோளாறு – விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்க மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்வதே, குறித்த விசாரணையின் நோக்கம் என, குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தம்மிக குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15ம் திகதி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இலங்கையில் மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், தற்போது காலை ஒரு மணித்தியாலமும் மாலை அரை மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.