ஜனாதிபதியின் அதிருப்தியையும் எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை.

பாரிய நிதி மோசடிகள், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி குழுவின் முன் முன்னிலையாகுமாறு முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 குறித்த அழைப்பாணையில் நாளை(20) முன்னிலையாகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக, இராணுவ வங்கிக் கணக்கு ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபா அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

குருநாகல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டிடப் பொருட்களை வழங்குவதற்கு எனத் தெரிவித்து குறித்த பணம் இராணுவ கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தினால் இந்தப் பணம், இராணுவ வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகவும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றிய லலித் வீரதுங்க மற்றும் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோர் நிதியை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

குறித்த இந்த விடயம் தொடர்பிலேயே முன்னாள் கடற்படைத் தளபதியிடம் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, முன்னாள் படையதிகாரிகள் நீதிமன்றங்கள் ஆணைக்குழுக்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஜனாதிபதி அண்மையில் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.