மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கப்படுவதாக தகவல் வட்டாரங்களால் தெரிவிக்கப்படுகிறது.
கோப் குழுவில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், அர்ஜூன் மகேந்திரனை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கும் நோக்கில் மாற்று அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தயாரித்த அறிக்கையை அங்கீகரித்து ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 10 உறுப்பினர்கள் கையொப்பிட்டுள்ளனர்.
கோப் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதினொரு உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
அர்ஜூன் மகேந்திரனை குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்றுக் கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கோப் குழு உறுப்பினர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.